Monday, September 24, 2012

Homemade Idli,Dosa Batter

அனைவரும் இந்த பதிவு அறிந்ததே....மெயிலில் நிறைய தோழிகள் இட்லி மாவு எப்படி அரைப்பதுன்னு கேட்டிருந்தார்கள்,அவர்களுக்காக இந்த பதிவு.

அம்மா வீட்டில் இட்லி,தோசை 2க்குமே ஒரே மாவுதான் பயன்படுத்துவோம்.மாமியார் வீட்டில் இட்லிக்கு என்றால் 3 - 1 அரிசி/ உளுந்து சேர்த்து அரைப்பாங்க.தோசைக்கு என்றால் 4-1 அரிசி/ உளுந்து,வெந்தயம் சேர்ப்பாங்க.

அம்மா எப்போழுதும் படியில் தான் அளந்து போடுவாங்க.அந்த அளவு எனக்கு தெரியாததால்,வெளிநாடு வந்த பிறகு நெட்டில் தேடினேன்.எதுவும் எனக்கு சரியா வரல.ஒருமுறை சமையல் ப்ரோக்ராமில் மெனுராணி செல்லம் அவர்கள் இட்லி/தோசைக்கு எப்படி,எந்த அளவு போட்டு அரைக்கனும்னு சொன்னாங்க.அதன்படி அரைத்ததில் இட்லி ரொம்பவே மென்மையாக இருந்தது.

நான் எப்போழுதும் அம்மா செய்வது போல் இட்லி/தோசைக்கு ஒரே மாவைதான் பயன்படுத்துகிறேன்...

சிலர் இட்லி மென்மையாக வருவதற்க்கு சாதம்,அவல்,சோயா பீன்ஸ் இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து அரைப்பாங்க.இட்லி சோடாவும் சேர்த்து அரைப்பாங்க.நான் எதுவுமே சேர்க்கமாட்டேன்.

குளிர்காலத்தில் மட்டும் மாவு சீக்கிரம் புளிக்காது,அப்போழுது மட்டும் 2 டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து மாவு கரைப்பேன்,சீக்கிரம் புளித்துவிடும்.

கிரைண்டரில் அரைத்தால் தான் எனக்கு இட்லி/வடை நல்லா வரும்.மிக்ஸியில் அரைத்தால் கல்லு போல இருக்கும்.

1 கப் = 250 மிலி

தே.பொருட்கள்

புழுங்கலரிசி/இட்லி அரிசி/பொன்மணி அரிசி - 4 கப்
முழு வெள்ளை உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*அரிசி+உளுந்து+வெந்தயம் இவற்றை கழுவி தனிதனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும்.

 *ஊறியதும் கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் போட்டு அரைத்தபின்  உளுந்தை போட்டு 40 நிமிடங்கள் அரைக்கவும்.

*ஒரேடியாக தண்ணீர் ஊற்றி அரைக்காமல் அவ்வப்போழுது இடையிடையே குளிர்ந்த தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
 *மேலே படத்தில் உள்ளவாறு உளுந்து நன்கு அரைப்பட்டு மாவாகி வரும் போது எடுத்து விட்டு அரிசியை போட்டு அரைக்கவும்.

 *அரிசி ரவை போல் அரைபடும்போது பாதி மாவை வழித்து மீதி பாதி அரிசி மாவை நைசாக அரைக்கவும்.

*பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.
 *8 மணிநேரம் நன்கு புளிக்கவிடவும்.
 *மேலே உள்ள படம் மாவு புளித்தபின் எடுத்தது.

*மாவு  புளித்த பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தபின் இட்லி தட்டில் துணி போட்டு மாவை 1 குழிக்கரண்டி எடுத்து ஒவ்வொரு தட்டிலும் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*தோசையாக சுடவேண்டுமெனில் தேவையான மாவை வேறொரு பாத்திரத்தில் எடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து தோசைகளாக சுடவும்.

பி.கு

*எப்போழுதும் முதலில் உளுந்தை அரைத்த பின் அரிசியை அரைக்கவும்.அரிசியை அரைத்தபின் உளுந்து போட்டு அரைத்தால் உளுந்து மாவு நிறைய ஆகாது.

*துணியில் ஊற்றும் இட்லிதான் பிடிக்கும்,சுடச்சுட சாப்பிடலாம்.எண்ணெய் தடவி ஊற்றினால் இட்லி ஆறியபிறகுதான் சாப்பிடமுடியும்.

*குளிர்காலத்தில் மாவு சீக்கிரம் புளிக்க அரிசி/உளுந்தை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து ஹீட்டர் கீழே வைக்கலாம்.சீக்கிரம் புளித்துவிடும்.

0 comments:

Post a Comment