Sunday, September 30, 2012

தே.பொருட்கள்

மைதாமாவு - 1 கப்
 நெய் - 1/2 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்

செய்முறை

*அவனை 180°C  10 நிமிடம் முற்சூடு செய்யவும்.

*பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.


*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் வைத்து ,மாவை சிறு உருண்டையாக எடுத்து லேசாக அழுத்தி இடைவெளிவிட்டு வைக்கவும்.


*அவனின்  வெப்பநிலையை குறைத்து 120°C ல் 10 -15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு

* பிஸ்கட் அவனில் இருந்து எடுக்கும் போது வேகாதமாதிரி இருக்கும்.ஆறியதும் சரியாக இருக்கும்.

*அதிகநேரம் வேகவைத்தால் பிஸ்கட் நிறம் மாறிவிடும்.

*இந்த அளவில் 10 பிஸ்ட்கள் வரும்...மாவு பிசையும்போதே நானும்,என் பொண்ணும் கொஞ்சம் சாப்பிட்டாச்சு,கடைசியில் 8 பிஸ்கட்கள் தான் வந்தது.

*அலுமினியம் பாயிலுக்கு பதில் நான் பயன்படுத்தியிருப்பது மீள்சுழற்சி துணி,அவனில் வைத்து பேக்கிங் செய்வதற்கென்றே கடையில் கிடைக்கிறது.இந்த துணியை ஒரு முறை பயன்படுத்திய பின் நீரில் அலசி காயவைத்தாலே போதும்.



Thursday, September 27, 2012



போன வாரம் என் பொண்ணு பிறந்தநாளுக்காக செய்த கேக்.டெகரேஷன் ஐடியா  கொடுத்தது என் பொண்ணு....

தே.பொருட்கள்

பாகம் - 1

மைதா மாவு - 2 கப்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

பாகம் - 2

கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின் = 400 கிராம்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/4 கப்
காபி - 1 கப்
காபி எசன்ஸ்/ வெனிலா எசன்ஸ்/சாக்லேட் எசன்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை

*அவனை 180 °C முற்சூடு செய்யவும்.

*பாகம் -1 ல் கொடுக்கபட்ட பொருட்களை ஒன்றாக கலந்து  நன்றாக சலிக்கவும்.

*பாகம் -2 ல் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக கலந்து பாகம் - 1 ல் கொடுக்கப்பட்ட பொருட்களை மிருதுவாக கலக்கவும்.

*கேக் பானில் வெண்ணெய்/எண்ணெய் தடவி மைதா மாவை தூவி  அதிகப்படியான மாவை கொட்டிவிடவும்.

*கேக் கலவையை கேக் பானில் ஊற்றி 30-35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

 *கேக் ஆறியதும்  வறண்ட மேல் பாகத்தை மேலோடு வெட்டி எடுக்கவும்.

சர்க்கரை சிரப்

தண்ணீர் - 1/2 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்

*இவற்றை ஒன்றாக கலந்து ப்ரெஷ்ஷால் சிரப்பை கேக்கில் தடவவும்.

விப்பிங் க்ரீம் - 1 1/2 கப்

விப்பிங் க்ரீம் செய்ய இங்கே பார்க்கவும்.

சாக்லேட் க்ரீம் செய்ய

துருவிய டார்க் சாக்லேட் - 200 கிராம்
ஹெவி க்ரீம்  - 1 கப்

*ஹெவி க்ரீமை சூடு செய்து துருவிய சாக்லேட்டில் ஊற்றி நன்கு கலக்கவும்.

கேக்கின் மேல் விப்பிங் க்ரீம் தடவி விரும்பியவாறு டெகரேஷன் செய்யவும்.

Monday, September 24, 2012

Homemade Idli,Dosa Batter

0
அனைவரும் இந்த பதிவு அறிந்ததே....மெயிலில் நிறைய தோழிகள் இட்லி மாவு எப்படி அரைப்பதுன்னு கேட்டிருந்தார்கள்,அவர்களுக்காக இந்த பதிவு.

அம்மா வீட்டில் இட்லி,தோசை 2க்குமே ஒரே மாவுதான் பயன்படுத்துவோம்.மாமியார் வீட்டில் இட்லிக்கு என்றால் 3 - 1 அரிசி/ உளுந்து சேர்த்து அரைப்பாங்க.தோசைக்கு என்றால் 4-1 அரிசி/ உளுந்து,வெந்தயம் சேர்ப்பாங்க.

அம்மா எப்போழுதும் படியில் தான் அளந்து போடுவாங்க.அந்த அளவு எனக்கு தெரியாததால்,வெளிநாடு வந்த பிறகு நெட்டில் தேடினேன்.எதுவும் எனக்கு சரியா வரல.ஒருமுறை சமையல் ப்ரோக்ராமில் மெனுராணி செல்லம் அவர்கள் இட்லி/தோசைக்கு எப்படி,எந்த அளவு போட்டு அரைக்கனும்னு சொன்னாங்க.அதன்படி அரைத்ததில் இட்லி ரொம்பவே மென்மையாக இருந்தது.

நான் எப்போழுதும் அம்மா செய்வது போல் இட்லி/தோசைக்கு ஒரே மாவைதான் பயன்படுத்துகிறேன்...

சிலர் இட்லி மென்மையாக வருவதற்க்கு சாதம்,அவல்,சோயா பீன்ஸ் இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து அரைப்பாங்க.இட்லி சோடாவும் சேர்த்து அரைப்பாங்க.நான் எதுவுமே சேர்க்கமாட்டேன்.

குளிர்காலத்தில் மட்டும் மாவு சீக்கிரம் புளிக்காது,அப்போழுது மட்டும் 2 டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து மாவு கரைப்பேன்,சீக்கிரம் புளித்துவிடும்.

கிரைண்டரில் அரைத்தால் தான் எனக்கு இட்லி/வடை நல்லா வரும்.மிக்ஸியில் அரைத்தால் கல்லு போல இருக்கும்.

1 கப் = 250 மிலி

தே.பொருட்கள்

புழுங்கலரிசி/இட்லி அரிசி/பொன்மணி அரிசி - 4 கப்
முழு வெள்ளை உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*அரிசி+உளுந்து+வெந்தயம் இவற்றை கழுவி தனிதனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும்.

 *ஊறியதும் கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் போட்டு அரைத்தபின்  உளுந்தை போட்டு 40 நிமிடங்கள் அரைக்கவும்.

*ஒரேடியாக தண்ணீர் ஊற்றி அரைக்காமல் அவ்வப்போழுது இடையிடையே குளிர்ந்த தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
 *மேலே படத்தில் உள்ளவாறு உளுந்து நன்கு அரைப்பட்டு மாவாகி வரும் போது எடுத்து விட்டு அரிசியை போட்டு அரைக்கவும்.

 *அரிசி ரவை போல் அரைபடும்போது பாதி மாவை வழித்து மீதி பாதி அரிசி மாவை நைசாக அரைக்கவும்.

*பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.
 *8 மணிநேரம் நன்கு புளிக்கவிடவும்.
 *மேலே உள்ள படம் மாவு புளித்தபின் எடுத்தது.

*மாவு  புளித்த பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தபின் இட்லி தட்டில் துணி போட்டு மாவை 1 குழிக்கரண்டி எடுத்து ஒவ்வொரு தட்டிலும் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*தோசையாக சுடவேண்டுமெனில் தேவையான மாவை வேறொரு பாத்திரத்தில் எடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து தோசைகளாக சுடவும்.

பி.கு

*எப்போழுதும் முதலில் உளுந்தை அரைத்த பின் அரிசியை அரைக்கவும்.அரிசியை அரைத்தபின் உளுந்து போட்டு அரைத்தால் உளுந்து மாவு நிறைய ஆகாது.

*துணியில் ஊற்றும் இட்லிதான் பிடிக்கும்,சுடச்சுட சாப்பிடலாம்.எண்ணெய் தடவி ஊற்றினால் இட்லி ஆறியபிறகுதான் சாப்பிடமுடியும்.

*குளிர்காலத்தில் மாவு சீக்கிரம் புளிக்க அரிசி/உளுந்தை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து ஹீட்டர் கீழே வைக்கலாம்.சீக்கிரம் புளித்துவிடும்.

Thursday, September 20, 2012

தே.பொருட்கள்

வேகவைத்த பாஸ்தா - 3 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் -2
சுகினி துண்டுகள் -1/2 கப்
ப்ரோக்கலி - 1/2 கப்
துருவிய சீஸ் -மேலே தூவ
உப்பு + ஆலிவ் எண்ணெய் = தேவைக்கு

வெள்ளை சாஸ் (White Sauce/ Bechamel Sauce)

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 2 1/2 கப்
உப்பு -தேவைக்கு
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய்பொடி - 1/2  டீஸ்பூன்


செய்முறை

*கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும்.

*நீர் ஊற்றாமல் சிறுதீயிலே வைத்து காய்கள் 3/4 பாகம் வேகவைத்தால் போதும்.

*வெள்ளை சாஸ் செய்ய

பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு மைதாவை தூவி கருகாமல் வறுக்கவும்.
பின் உப்பு+பாலை ஊற்றி கட்டிவிழாமல் கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.
பின் மிளகுத்தூள்+ஜாதிக்காய்தூள் சேர்க்கவும்.
*வெள்ளை சாஸ் கலவையில் வேகவைத்த பாஸ்தா மற்றும் காய்கள் சேர்த்து கிளறவும்.

*பேக் செய்யும் டிரேயில் பாஸ்தா கலவையினை வைத்து அதன் மேல் துருவிய சீஸ் தூவி விடவும்.

*180 °C முற்சூடு செய்த அவனில் 10 -15 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை பேக் செய்து எடுக்கவும்.

பி.கு
வெள்ளை சாஸ் செய்ய ஜாதிக்காய்தூள் சேர்ப்பது மிக முக்கியம்.



Monday, September 17, 2012

தே.பொருட்கள்

மைசூர் பருப்பு  - 1 கப்
தேங்காய்துருவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து பதமாக வேகவைத்து எடுத்து நீரை வடிக்கவும்.

*பின் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வேகவைத்த பருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு

*இந்த பருப்பு சீக்கிரமாக 10 - 15 நிமிடங்களில் வெந்துவிடும்.

*வேகவைத்த நீரை சூப்,ரசம் செய்ய பயன்படுத்தலாம்.










Thursday, September 13, 2012

*கசகசா உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.இதை பேக்கிங் மற்றும் சாலட் செய்ய பயன்படுத்தபடுகிறது.இதில் இரும்புசத்து,நார்சத்து,பாஸ்பரஸ்,Thiamine,Riboflavin,Vitamin B,Omega -3 இருக்கிறது.

*ஒரு டீஸ்பூன் கசகசாவில் 13கிராம் கலோரி இருக்கிறது. டயட்டில் இருப்பவர்கள் உணவில் முந்திரிக்கு பதில் கசகசா சேர்த்து க்ரேவி செய்யலாம்.

*க்ரேவி கெட்டியாக வருவதற்க்கு 1 டேபிள்ஸ்பூன் அளவு சேர்த்தால் போதும்.இதில் கறுப்பு மற்றும் வெள்ளை என இருவகை இருக்கிறது.

*கறுப்பு கசகசா பேக்கிங் மற்றும் சாலட்களுக்கும்,வெள்ளை கசகசா சமையலுக்கும் பயன்படுத்தபடுகிறது.

*இதில் அதிகளவு  கால்சியம் இருப்பதால் எலும்புக்கும்,பற்களுக்கும் மிக நல்லது.

*இதில் அதிகளவு Morphine   இருப்பதால் கர்ப்பகாலத்தில் கசகசா சாப்பிடுவதை தவிர்க்கவும்.போதை பொருட்கள் செய்ய பயன்படுத்துவதால் இது சிலநாடுகளில் தடைசெய்யபட்டுள்ளது.

*இதன் எண்ணெயிலிருந்து சோப்பு மற்றும் வார்னிஷ் தயாரிக்கபடுகிறது.
அதிகளவு நார்சத்து இருப்பதால் இரத்த அழுத்தம்,டயாபட்டீஸ்க்கு மிக நல்லது.இதயநோய் வராமல் தடுக்கும் தன்மையுள்ளது.


*இதில் Linoleic Acid இருப்பதால் இதன் எண்ணெய் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது

கசகசா பாயாசம் கர்நாடாகவின் பிரபலமான பாயாசம்.இவ்வளவு நன்மைகள் இருக்கும் கசகசாவில் இங்கே பார்த்து நான் செய்த பாயாசம்.

முதன்முறையாக செய்ததால் கொஞ்சம் தயக்கமாகதான் இருந்தது எப்படி இருக்குமோன்னு,செய்து சுவைத்தபின் தான் தெரிந்தது அதிகளவில் செய்திருக்கலாம்னு ......

தே.பொருட்கள்

கசகசா - 2 டேபிள்ஸ்பூன்
ஒட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பால் - 3 கப்
சர்க்கரை = 5 - 6  டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வருத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் இதனுடன் +துருவிய தேங்காய்+ஒட்ஸ் +சிறிது பால் சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் மீதமுள்ள பாலை கொதிக்கவிடவும்.கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து கைவிடாமல் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

*பின் சர்க்கரை சேர்த்து கொதித்த  பின் இறக்கவும்.

பி.கு
*இதனை வெல்லம்/நாட்டு சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.இந்தளவு இனிப்பு சரியாக இருக்கும்,விரும்பினால் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

*விரும்பினால் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கலாம்.அது சேர்க்காமலே மிக நன்றாக இருந்தது.

*ஒரிஜினல் ரெசிபியில் கசகசாவுடன் ஊறவைத்த அரிசி சேர்த்து அரைப்பார்கள்.அதற்க்கு பதில் நான் ஒட்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.

*அரிசிக்கு பதில் அரிசிமாவு/ ப்ரவுன் அரிசி/ ப்ரவுன் அரிசிமாவு சேர்த்து செய்யலாம்.

Monday, September 10, 2012



தே.பொருட்கள்

முழு வெள்ளை உளுந்து - 1 கப்
கடலைப்பருப்பு+துவரம்பருப்பு - தலா 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்
பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*உளுந்தை தனியாகவும்,பருப்புகளை ஒன்றாகவும் 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.

*உளுந்தை ,உளுந்துவடைக்கு அரைப்பதைபோல அரைத்து அதனுடன் பச்சை மிளகாய்+இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும்.

*பருப்புகளை பெருஞ்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*அனைத்தையும் உப்பு+வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கி வடைகளாக சுட்டெடுக்கவும்.


Thursday, September 6, 2012

 இந்த சுவையான குறிப்பை மதுராஸ்கிச்சனில் பார்த்து செய்தது..நாண் ,புலாவ் இவற்றிற்க்கு நன்றாக இருக்கும்.

தே.பொருட்கள்
பனீர் - 250 கிராம்
துண்டுகளாகிய பச்சை,சிகப்பு,மஞ்சள் குடமிளகாய் -1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள்+வரமிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன்
சோயா சாஸ் +சில்லி கார்லிக் சாஸ் -தலா 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*பனீரை சிறிது எண்ணெயில் வறுத்து உப்பு கலந்த வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து நீரை வடிக்கட்டவும்.

*1 வெங்காயம் +தக்காளி இவற்றை பொடியாக நறுக்கவும்.

*இன்னொறு வெங்காயத்தை வெட்டி தனித்தனியாக பிரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு துண்டுகளாகிய வெங்காயம்+குடமிளகாய் இவற்றை லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.
 *அதே கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 *பின் இஞ்சி பூண்டு விழுது + தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
 *பின் தூள் வகைகள் மற்றும் சாஸ் வகைகள் +உப்பு சேர்த்து வதக்கவும்.
 *பின் பனீர்+வதக்கிய வெங்காய குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
பி.கு

*சில்லி கார்லிக் சாஸ் செய்ய

காய்ந்த மிளகாய் - 10 + பூண்டுப்பல் -8+சர்க்கரை ,உப்பு -தலா 1 டீஸ்பூன் + வெள்ளை வினிகர் - 1 டேபிள்ஸ்பூன் இவற்றை நன்கு விழுதாக அரைத்து பிரிட்ஜில் 4-5 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*சாஸ்களில் உப்பு இருப்பதால் உப்பை கவனமாக சேர்க்கவும்.

Monday, September 3, 2012

தே.பொருட்கள்

சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 8
புளிகரைசல் - 1 கப்
வடகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
துருவிய மாங்காய் இஞ்சி - 3 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம்+வடகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பூண்டுப்பல்+அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.

*பின் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.